கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) ஆகஸ்ட் 21 முதல் 23 ஆம் திகதி வரை நடைபெற்ற 23 ஆவது ProFood ProPack & Ag-Biz 2026 கண்காட்சியில் அனுசரணை வழங்கியும் பங்கேற்றும், நாட்டின் உணவு, விவசாயம் மற்றும் பொதியிடல் துறைகளை மேம்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை Markspen குழுமம் மீள உறுதிப்படுத்தியுள்ளது.


வணிகங்களின் உற்பத்தித்திறன், வினைத்திறன் மற்றும் மதிப்புறுத்தலை உயர்த்த உதவும் நடைமுறை ரீதியான தீர்வுகளை வழங்கி வரும் Markspen குழுமம், விவசாயத்தை மையமாகக் கொண்டு இயங்கும் தனது மூன்று முக்கிய துணை நிறுவனங்களான Markspen Labels, Markspen Holdings மற்றும் ‘கனதரா’ ஆகியவற்றை ஒருங்கிணைத்து இக்கண்காட்சியில் களம் இறங்கியிருந்தது. இதன் மூலம் தொழில்நுட்பம், விவசாயம், உற்பத்தி மற்றும் உள்நாட்டு தொழில்முயற்சிகளை ஒன்றிணைக்கும் குழுமத்தின் விரிவான அணுகுமுறை வெளிப்படுத்தப்பட்டது.

விவசாய மற்றும் உணவு உற்பத்தி விநியோகச் சங்கிலியில் (Value chain) காணப்படும் சவால்களுக்குத் தொழில்நுட்பம் எவ்வாறு தீர்வுகளை வழங்க முடியும் என்பதைச் சுட்டிக்காட்டுவதற்கான ஒரு முக்கிய தளமாக ProFood ProPack & Ag-Biz கண்காட்சி Markspen குழுமத்திற்கு அமைந்திருந்தது. பட்டைக் குறியீடு மற்றும் சிட்டையிடுதல் (Barcode and Labeling), அரிசி ஆலைகள், தானியப் பதப்படுத்தல், பாதுகாப்பு, பொதியிடல் மற்றும் பாரம்பரிய இலங்கை விவசாயப் பொருட்கள் உள்ளிட்ட பரந்த அளவிலான தீர்வுகளைக் குழுமம் இங்கு காட்சிப்படுத்தியிருந்தது.
இலங்கையின் முன்னணி காகிதச்சுருள்கள் மற்றும் பட்டைக் குறியீட்டு தீர்வு நிறுவனமான Markspen Labels, பட்டைக் குறியீடு மற்றும் சிட்டையிடுதல் (Barcode and Labeling) அமைப்புகள், சிட்டை அச்சு இயந்திரங்கள், வெப்ப காகித சுருள்கள், பட்டை குறியீட்டு ஸ்டிக்கர் சுருள்கள், DT, TT, Semi-Gloss மற்றும் BOPP சிட்டைகள், ரிப்பன்கள் உள்ளிட்ட பல்வேறு அச்சிடல் சாதனங்களைக் காட்சிப்படுத்தியிருந்தது. அத்துடன், நவீன வணிகங்களின் செயற்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட தொழில்முறை சிட்டையிடல் தீர்வுகள், மென்பொருட்கள், பட்டை குறியீட்டு அச்சு இயந்திரங்கள், POS முனையங்கள் மற்றும் பட்டை குறியீட்டு ஸ்கேனர்களையும் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
இதேவேளை, Markspen Holdings நவீன விவசாயத் தொழில்நுட்பம் மற்றும் Smart Agriculture முறைமைகளின் மீது கவனம் செலுத்தியிருந்தது. உயர் ரக அரிசி உற்பத்திக்குத் தேவையான வர்ண பிரிப்பான்கள் (Colour sorters), உலர்விகள் (Dryers), தரம் பிரிப்பான்கள் (Graders) மற்றும் அரிசி ஆலை இயந்திரங்கள் மட்டுமன்றி, பொதியிடல் மற்றும் அரைக்கும் இயந்திரங்கள், எண்ணெய் பிரித்தெடுக்கும் கருவிகள் மற்றும் உயர் தொழில்நுட்ப தானியங்கிப் பாதுகாப்பு அமைப்புகளையும் நிறுவனம் இங்கு காட்சிப்படுத்தியது. மேலும், DOMA CTP 20 DE ரக இரட்டை உயர்த்தியைக் கொண்ட (Double-elevator) அரிசி ஆலை இயந்திரம் உள்ளிட்ட பல நவீன விவசாய உபகரணங்களும் இதன் போது காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
பாரம்பரிய அரிசி வகைகள் மற்றும் உயர்தர உள்நாட்டு விவசாய உற்பத்திகளை முதன்மைப்படுத்தி, இலங்கை விவசாயத்தின் மதிப்பை வெளிப்படுத்திய ‘கனதரா’ (Kanadara) நிறுவனம், Markspen குழுமத்தின் பங்களிப்பை முழுமைப்படுத்தியிருந்தது.
“ProFood ProPack & Ag-Biz கண்காட்சியானது எங்களுக்கு வெறும் ஒரு கண்காட்சி மட்டுமல்ல. தொழில்நுட்பம், உள்நாட்டு தொழில்முயற்சிகள் மற்றும் விவசாயம் ஆகியன இணைந்து, எவ்வாறு அதிக வினைத்திறன்மிக்க மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்ற வணிகங்களை உருவாக்க முடியும் என்பதைக் காட்டுவதற்கான ஒரு வாய்ப்பாகவே இது அமைந்தது” என Markspen குழுமத்தின் சார்பில் கருத்து வெளியிட்ட அமில் கலங்க தெரிவித்தார். “இலங்கையின் உணவு மற்றும் விவசாயப் பொருளாதாரத்திற்குத் அடித்தளமாக விளங்கும் இத்துறைகள் மீது நாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும், அவற்றின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கான எங்களது அர்ப்பணிப்பையுமே எமது இந்த அனுசரணை பிரதிபலிக்கிறது” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
