இலங்கையில் தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு உறுதுணையாக DFCC ஆலோகா மற்றும் Chrysalis ஆகியன ஒன்றிணைந்துள்ளன  

DFCC வங்கி பிஎல்சி அறிமுகப்படுத்தியுள்ள DFCC ஆலோகா என்ற பெண்களுக்கான விசேட தீர்வுத் திட்டத்தின் கீழ், நாடெங்கிலும் நுண், சிறிய, மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு உறுதுணையாக DFCC ஆலோகா மற்றும் Chrysalis ஆகியன ஒன்றிணைந்துள்ளன. பெண்கள் தமக்கு தேவையான நிதி வசதிகளைப் பெற்றுக்கொள்ளவும், தமது தொழில்முயற்சிகளை வளர்ச்சி பெறச் செய்யவும், மற்றும் சந்தை வாய்ப்புக்களை அதிகரித்துக் கொள்ளவும் உதவுவதே இதன் நோக்கம்.      

r62 0847.jpg

சமூகத்தின் அடிமட்டத்தில் தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பெண்களுடன் மிகவும் ஆழமான ஈடுபாடுகளை Chrysalis பேணி வருகின்றது. நிதி நிபுணத்துவம் மற்றும் தொழில் முயற்சிகளுக்கான ஆதரவை வழங்குவதில் DFCC வங்கி சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றது. எனவே இந்த இரு நிறுவனங்களும் கைகோர்த்துச் செயற்பட முன்வந்துள்ளமை தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு சிறந்த பலனை அளிக்கவுள்ளது. கட்டுக்கோப்பின்றிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு தமது தொழில்முயற்சிகளை கட்டுக்கோப்புடையவையாக மாற்றியமைப்பதற்குத் தேவையான நிதி வசதி, தொழில் முயற்சிகளை வளர்ப்பதற்கான உதவிகள், மற்றும் தொழில் ரீதியான அறிமுகங்களை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்புக்களை வழங்கி அவர்களுடைய தொழில் முயற்சிகளை தொடர்ந்தும் சிறப்பாக முன்னெடுப்பதற்கு வழிவகுப்பதே இந்த ஒத்துழைப்பின் நோக்கமாக உள்ளது.       

தொழிற்பாட்டு வல்லமையை மேம்படுத்தல் மற்றும் தொழில் முயற்சிகளை நீண்ட காலத்திற்கு முன்னெடுத்துச் செல்லும் ஆற்றலை வளர்த்தல் ஆகியவற்றுக்குத் தேவையான கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளை அதிகரித்தல், பயிற்சி ஏற்பாடுகள், டிஜிட்டல் பயன்பாட்டு அறிவு, மற்றும் தொழில் முயற்சிகளை வளர்ப்பதற்கான ஆலோசனை உதவிகள் போன்றவற்றை இந்த கூட்டு முயற்சியினூடாக பெண் தொழில் முயற்சியாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் தமது உற்பத்திகளைச் சிறப்பாக சந்தைப்படுத்துவதற்கு மாவட்ட மட்டத்திலான வணிக அமைப்புக்கள் மற்றும் தேசிய மட்டத்திலான கைத்தொழில் அமைப்புக்கள் போன்றவற்றுடன் அறிமுகங்களை ஏற்படுத்திக் கொள்ளவும் இக்கூட்டுமுயற்சி அவர்களுக்கு உதவும்.    

DFCC வங்கியின் பிரதி தலைமை நிர்வாக அதிகாரி ஷமிந்திர மர்சலீன் அவர்கள் இக்கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவிக்கையில், 

தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பெண்கள் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய பக்கபலமாகக் காணப்படுகின்றனர். எனவே அவர்களுக்கு நிதி வசதிகளை வழங்குவதுடன் மாத்திரம் நின்றுவிடாது, தொடர்ந்தும் வளர்ச்சி காண்பதற்குத் தேவையான கட்டமைப்புக்கள், அறிவு, மற்றும் அறிமுகங்கள் ஆகியவற்றை அவர்கள் பெற்றுக்கொள்ளவும் DFCC ஆலோகா மூலமாக நாம் தொடர்ந்து உதவி வருகின்றோம். தற்போது Chrysalis உடனான கூட்டு முயற்சியுடன், கட்டுக்கோப்புடனான நிதி வசதி மற்றும் உற்பத்திகளைச் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பு ஆகியவற்றினூடாக நாம் அடிமட்ட தொழில்முயற்சிகளை வலுப்படுத்தவுள்ளோம்.

DFCC வங்கி ஏற்கனவே இலங்கையில் நுண், சிறிய, மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளை வளர்ப்பதற்கு பேராதரவு வழங்கி வருகின்ற நிலையில், தொழில் முயற்சியில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கும் அதே ஆதரவை வழங்க தற்போது முன்வந்துள்ளது. நாட்டில் வேலைவாய்ப்புக்கள், உற்பத்தித்திறன், மற்றும் அனைவருக்கும் சம வாய்ப்பளிக்கும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு இத்துறைகள் முக்கியமான உந்துசக்தியாகக் காணப்படுகின்றன. எனவே, தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பெண்கள் முகங்கொடுத்துள்ள நிதி மற்றும் கட்டுக்கோப்பு சார்ந்த முட்டுக்கட்டைகளைப் போக்குவதில் இந்த கூட்டு முயற்சி கவனம் செலுத்தியுள்ளது. தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பெண்கள் தமது வருமானத்தை அதிகரிக்கவும், வேலைவாய்ப்புக்களைத் தோற்றுவிப்பதற்கும், மற்றும் சமூக மட்டத்தில் பொருளாதார மீள்திறனை வலுப்படுத்தவும் இது அவர்களுக்கு உதவும்.  

Chrysalis நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிகா குணசேன அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்:

“நாம் சுமார் ஒரு தசாப்தகாலமாக இலங்கையின் அனைத்து பாகங்களிலும் தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பெண்களுடன் மிக நெருக்கமான இணைந்து செயற்பட்டு வந்துள்ளோம். குறிப்பாக, கிராமப்புறங்கள் மற்றும் நலிவுற்ற சமூகங்கள் மத்தியில் உள்ள பெண் தொழில் முயற்சியாளர்கள் தமது தொழில்களை வளர்ப்பதற்கு நாம் ஆதரவளித்து வந்துள்ளோம். தமது தொழில் முயற்சிகள் மற்றும் சமூகங்களை வளம் காணச் செய்வதில் தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பெண்கள் கொண்டுள்ள வளர்ச்சி வாய்ப்புக்கள், மீள்திறன், மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றின் வலிமையை நாம் நன்கறிவோம். அந்த வகையில் தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு நிதி வசதி, நிதி தொடர்பான அறிவு, மற்றும் தொழில் முயற்சிகளை வளர்ப்பதற்கான உதவிகள் ஆகியவற்றை அதிகரிப்பதனூடாக தன்னம்பிக்கையும், மீள்திறனும் கொண்டவர்களாக அவர்கள் மாறுவதற்கு DFCC ஆலோகா உடனான கூட்டுமுயற்சி எமக்கு இடமளிப்பதனுடன், நற்பலனையும் அதிகரிக்கச் செய்யும்.”

தொழில் முயற்சிகளில் பெண்கள் ஈடுபடும் வாய்ப்புக்களை அதிகரிப்பதற்குத் தேவையான நிதித் தீர்வுகள், தொழில் முயற்சிகளை வளர்க்கும் முயற்சிகள் மற்றும் கூட்டு முயற்சிகளை அதிகரிக்கச் செய்வதன் மூலமாக அவர்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு காத்திரமான பங்களிப்புக்களை வழங்க DFCC வங்கியின் பிரதான வங்கித்தீர்வுகளில் ஒன்றான DFCC ஆலோகா தொடர்ந்தும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கும்.    

கட்டுக்கோப்புடனான நிதி வசதி மற்றும் அடிமட்டத்தில் தொழில் முயற்சிகளை மேம்படுத்தும் ஆற்றல் ஆகியவற்றின் சிறப்பான ஒன்றிணைப்பாகக் காணப்படுகின்ற DFCC ஆலோகா மற்றும் Chrysalis ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டு முயற்சி இலங்கையில் இன்னும் அதிகமான அளவில் அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் தொழில் முயற்சிக்கான சூழலைக் கட்டியெழுப்பும் என்பதில் ஐயமில்லை.       

கூடுதல் விபரங்களுக்கு, www.dfcc.lk என்ற இணையத்தளத்திற்குச் செல்லுங்கள் அல்லது 011 2 350 000 என்ற இலக்கத்தினூடாக DFCC வங்கி அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.

AD 4nXdecZ8iJXOgTqNbU8EN SC7eIX6ALGRiP4uloIjS1XadzAMmUqHB9SQ8xVc8jYY7ZUdFlhaQgLYNSVFIR1fWTkhkePn5EtJBwFIn7eM9rAr7Ox4st TCvOeEp4OJ 3iv3RPT6Ox6JMAegAo6Sy5p 0?key=SyFaX 7AZN MV IRTpkWhA