சிலோன் வாகன இறக்குமதியாளர் சங்கத்தினர் பெருமதிப்புமிக்க Motor Rally 2026 ஐ அறிமுகப்படுத்துகின்றனர்

சிலோன் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தினால் (CAIA) ஏற்பாடு செய்யப்பட்டு, CDB Finance PLC நிறுவனத்தின் பிரதான அனுசரணையுடன் நடாத்தப்படும் Motor Rally 2026 வரும் 2026 ஓகஸ்ட் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளது. நாட்டின் முன்னணி வாகன இறக்குமதியாளர்கள், வர்த்தகப் பங்காளிகள் மற்றும் வாகன ஆர்வலர்களை ஒரே தளத்தில் ஒன்றிணைத்து, வாகனத் துறையின் பன்முகத்தன்மை மற்றும் நவீன கண்டுபிடிப்புகளைக் கொண்டாடுவதோடு, தொழில்முறைத் தொடர்புகள் மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதை இந்நிகழ்வு நோக்காகக் கொண்டுள்ளது.

இலங்கையில் பொறுப்புமிக்க வாகனக் கலாச்சாரத்தையும், வாகனங்கள் மீதான ஆர்வத்தையும் பகிர்ந்து கொள்ளும் துறை சார்ந்த முக்கியப் பங்காளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் பலரும் இதில் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 ஜூலை 30ம் திகதி வியாழக்கிழமையன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இந்த Motor Rally தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டதுடன், நிகழ்வின் எண்ணக்கரு, பயணப் பாதை மற்றும் ஆதரவளிக்கும் முதன்மைப் பங்காளர்களும் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

இலங்கையின் முன்னணி வாகன இறக்குமதியாளர்களின் பல்வேறு வகையான வாகனங்களை வெளிப்படுத்தும் இந்த வாகனப் பேரணி, கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள புறநகர்ப் பகுதிகளில் கவனமாகத் திட்டமிடப்பட்ட பயணப் பாதையினூடாகப் பயணிக்கும் தனித்துவமான அனுபவத்தைப் பங்கேற்பாளர்களுக்கு வழங்கவுள்ளது. பாதுகாப்பான வாகனம் செலுத்தல், வாகன ஆர்வலர்களிடையேயான நல்லுறவு மற்றும் உள்ளூர் வாகனத் துறையினரின் தீவிர பங்களிப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் இந்த வாகனப் பேரணி அமையவுள்ளது.

இம்முன்னெடுப்பின் பின்னணியிலிருக்கும் ஏற்பாட்டுக் குழுவான சிலோன் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (CAIA), நாட்டின் வாகனத் துறையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் முன்னணி வாகன இறக்குமதியாளர்களின் பிரதிநிதியாகச் செயற்பட்டு வருகிறது. வாகனத் துறையில் புதுமை, பொறுப்புமிக்க இயக்கம் மற்றும் வாகன ஆர்வலர்களின் ஈடுபாட்டை ஊக்குவிக்கும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு இச்சங்கம் தொடர்ந்தும் ஆதரவளித்து வருகின்றது.

இவ்வுத்தியோகபூர்வ தொடக்க நிகழ்வின் ஒரு பகுதியாக, இதற்காகக் கைகோர்த்துள்ள பிரதான கூட்டுத்தாபன பங்காளர்களையும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்விற்கு CDB Finance PLC பிரதான அனுசரணையாளராகவும் (Title Sponsor), Singer Finance PLC முதன்மை அனுசரணையாளராகவும் (Main Sponsor), Home Lands நிறுவனம் பிளாட்டினம் அனுசரணையாளராகவும் (Platinum Sponsor) இணைந்துள்ளன. இது இத்துறையில் இந்நிகழ்வுக்குக் கிடைத்துள்ள பலமான ஆதரவை வெளிப்படுத்துகிறது.

இந்நிகழ்வு குறித்து CDB Finance PLC நிறுவனத்தின் விற்பனை மற்றும் வணிக அபிவிருத்திப் பணிப்பாளர் சசீந்திர முனசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்துடன் இணைந்து இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க Motor Rally-யை வலுப்படுத்துவதில் CDB பெருமையடைகிறது. இத்தகைய மதிப்புமிக்க சங்கத்துடன் இணைந்து, இலங்கை முழுவதும் வாகன உரிமையாண்மையை அதிகரிப்பதிலும் முன்னெடுப்பதிலும் நாங்கள் முன்னணியில் திகழ்கிறோம். ஒரு முற்போக்கான நிதித் தீர்வுகள் வழங்குனராக, வாகனத் துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதுடன், புதுமையான நிதி தயாரிப்புகள் மூலம் வாகனங்களைப் பெற்றுக்கொள்வதை எளிதாக்கவும் நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம். இந்த பேரணி வெறும் வாகனங்களின் கொண்டாட்டம் மட்டுமல்ல, இத்துறையின் பரிணாம வளர்ச்சி, மீண்டெழும் திறன் மற்றும் எதிர்கால சாத்தியக்கூறுகளுக்கான ஒரு சான்றாகும்,” என்றார்.

Singer Finance PLC நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் துஷான் அமரசூரிய கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் வாகன ஆர்வலர்களின் நீடித்த ஆர்வத்தையும், வாகனத் துறையின் தொடர்ச்சியான வளர்ச்சியையும் பிரதிபலிக்கும் இலங்கை வாகன இறக்குமதியாளர்களின் இந்த Motor Rally-யுடன் கைகோர்ப்பதில் Singer Finance மகிழ்ச்சியடைகிறது. ‘உங்கள் முதற்தர குத்தகைப் பங்காளன்’ (Your Number 1 Leasing Partner) என்ற எமது வாக்குறுதியுடன் இந்தப் பங்களிப்பு கச்சிதமாகப் பொருந்துகிறது. நம்பிக்கையான நிதித் தீர்வுகள் மூலம் மேலும் பல இலங்கையர்களின் வாகனக் கனவை நனவாக்க நாங்கள் தொடர்ந்து வலுச்சேர்ப்போம்,” எனக் குறிப்பிட்டார்.

Home Lands குழுமத்தின் தலைவரும் நிர்வாகப் பணிப்பாளருமான நலின் ஹேரத் தெரிவிக்கையில், “புதுமை, பொறுப்புமிக்க இயக்கம் மற்றும் ஈடுபாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘Motor Rally 2026’ நிகழ்வில் பங்காளராக இணைவதில் Home Lands பெருமிதம் கொள்கிறது. இலங்கையின் முதற்தர, மிகவும் நம்பிக்கையான மற்றும் புதுமையான காணி மனை விற்பனை வர்த்தகநாமம் என்ற வகையில், நம்பிக்கை, புதுமை மற்றும் சிறப்புடன் காணி மனை விற்பனை தீர்வுகளில் தொடர்ந்து சிறந்த மதிப்பை வழங்குவதற்கான எங்களின் இலக்கிற்கு அமையவே இந்தப் பங்களிப்பு அமைந்துள்ளது,” என்றார்.

ஏற்பாட்டுக் குழுவின் பிரதிநிதிகள் நிகழ்வு பற்றிக் குறிப்பிடுகையில், இந்த Motor Rally ஒரு விறுவிறுப்பான அனுபவமாக மட்டுமன்றி, இலங்கையின் வாகன மற்றும் நிதித் துறைகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஒரு தளமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.

கூட்டுத்தாபன தலைவர்கள், முன்னணி வாகன வர்த்தக நாமங்கள், ஊடகப் பிரதிநிதிகள் மற்றும் வாகன ஆர்வலர்கள் பலரும் இதில் ஒன்றிணையவுள்ளதால், இலங்கையில் வாகனத் துறையின் பிரசன்னமும் செல்வாக்கும் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்தத்தில், Motor Rally 2026 நிகழ்வானது வாகனங்கள் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்துவதுடன், இலங்கையின் வாகனத் துறையை முன்னோக்கி நகர்த்தும் பங்குடைமைகளைக் கொண்டாடும் ஒரு மறக்க முடியாத நிகழ்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.