“தேசிய முன்னேற்றத்திற்கான கடன் சார் அறிவு” எனும் கருப்பொருளின் கீழ், இலங்கைக் கொடுகடன் தகவல் பணியகம் (CRIB) தனது வருடாந்த பிரதம நிறைவேற்று அதிகாரிகளின் (CEOs) பேரவை மற்றும் நிறுவன தரப்படுத்தல் விருது வழங்கல் விழா 2026 நிகழ்வை அண்மையில் நடாத்தியது. இந்நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.




நாட்டின் கடன் சார் அறிவு கட்டமைப்பின் எதிர்காலத்தை வடிவமைக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்பேரவையில், வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் (NBFIs), காப்பீட்டு நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் முக்கிய பொதுப் பயன்பாட்டுச் சேவை வழங்குனர்கள் உள்ளிட்ட நிதிச் சேவைகள் மற்றும் ஏனைய துறைகளைச் சேர்ந்த பிரதம நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

திரு. K.G.P. சிறிக்குமார – பிரதானி, இலங்கைக் கடன் தகவல் பணியகம் (CRIB), கலாநிதி நந்தலால் வீரசிங்க – மத்திய வங்கி ஆளுநர். கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர், டிஜிட்டல் பொருளாதாரம் & திரு. புஷ்பிக ஜெயசுந்தர – பணிப்பாளர் / பொது முகாமையாளர், இலங்கைக் கடன் தகவல் பணியகம் (CRIB)
மேன்மை பொருந்திய இந்நிகழ்வின் போது, CRIB அமைப்பின் பிரதானி திரு. K.G.P. சிறிக்குமார மற்றும் பணிப்பாளரும் பொது முகாமையாளருமான திரு. புஷ்பிக ஜெயசுந்தர ஆகியோர் உரையாற்றினர். நிகழ்வின் பிரதம விருந்தினரான கலாநிதி நந்தலால் வீரசிங்க உரையாற்றியதைத் தொடர்ந்து, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்வில் உரையாற்றிய இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவிக்கையில்: “ஒரு நவீன நிதி அமைப்பானது நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் உடனுக்குடனான தகவல்கள் என்பவற்றிலேயே தங்கியுள்ளது. டிஜிட்டல் மாற்றம், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மாற்றுத் தரவுகள் ஆகியவற்றின் ஊடாக CRIB போன்ற நிறுவனங்கள், கடன் அபாயங்களைக் குறைப்பதற்காக தகவல் சமச்சீரற்ற தன்மையை வென்றெடுப்பது மட்டுமன்றி, நுண், சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் (MSMEs), இளம் தொழில்முனைவோர்கள் மற்றும் கிராமப்புற சமூகங்களுக்கான நிதி உள்ளடங்கலையும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. எமது நிதித்துறையானது மேன்மேலும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டதாக மாறிவரும் நிலையில், வலுவான ஆளுகை, தனியுரிமைகள் மற்றும் பொறுப்புள்ள செயற்கை நுண்ணறிவுக்கான தரநிலைகளைப் பேணுவது ஆகியவை நீண்டகால நிதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கு அத்தியாவசியமானதாகும்” எனக் குறிப்பிட்டார்.
CRIB அமைப்பின் பிரதானி திரு. K.G.P. சிறிக்குமார அவர்கள் உரையாற்றுகையில்: “இலங்கையின் நிதித் துறையானது பிணை சார்ந்த கடன் வழங்கும் முறையிலிருந்து (Collateral-based lending), அதிநவீன அபாய மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்ட முறைமையை நோக்கியதாக உருவெடுத்து வரும் நிலையில், வங்கித் துறையின் எதிர்கால ஸ்திரத்தன்மையானது நம்பகமான மற்றும் உயர்தரத் தரவுகளிலேயே தங்கியுள்ளது. பல துறைகளின் தரவுகளை உள்ளடக்கிய மேம்பட்ட இயங்குதளமாக CRIB அடைந்துள்ள மாற்றமானது, சரியான நேரத்தில் பொறுப்பான கடன் தீர்மானங்களை எடுப்பதற்கு நிதி நிறுவனங்களை வலுப்படுத்துவதுடன், இறுதியில் மீள்திறன் கொண்ட பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கிறது” எனத் தெரிவித்தார்.
அத்துடன், ‘MyCRIB’ செயலியின் உத்தியோகபூர்வ அறிமுகமானது இந்நிகழ்வின் பிரதான சிறப்பம்சமாக அமைந்ததுடன், ஒவ்வொரு இலங்கையருக்குமான நிதிச் சேர்க்கை மற்றும் கடன் சார் அறிவை மேம்படுத்துவதில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகவும் பாரிய பாய்ச்சலாகவும் அமைந்துள்ளது. இச்செயலியானது குடிமக்கள் தங்கள் தனிப்பட்ட கடன் விபரங்கள் (Credit profiles) மற்றும் புள்ளிகளை (Credit scores) உடனுக்குடன் தடையின்றி அணுகுவதற்கான வாய்ப்பை வழங்கி அவர்களை வலுப்படுத்துகிறது. இதன் மூலம் நுகர்வோருக்கான முழுமையான மொபைல் செயலியை வழங்கும் உலகின் சில கடன் தகவல் பணியகங்களில் ஒன்றாக CRIB பரிணமித்துள்ளது. இச்செயலி மூலம் தனிநபர்கள் தங்களது கடன் விபரங்கள் மற்றும் கடன்புள்ளிகளைப் பாதுகாப்பாக அணுகுவதோடு, முரண்பாடுகளை சுட்டிக்காட்டவும், கடன் அறிக்கைகளை மூன்றாம் தரப்பினருடன் பகிர்ந்து கொள்ளவும், அறிவிப்புகளைப் பெறவும், அடையாளங்களை உறுதிப்படுத்தவும், கற்றல் மையத்தை அணுகவும் முடியும்.
CRIB அமைப்பின் பணிப்பாளரும் பொது முகாமையாளருமான திரு. புஷ்பிக ஜெயசுந்தர கருத்துத் தெரிவிக்கையில்: “‘MyCRIB’ செயலியின் அறிமுகத்துடன், நுகர்வோர் தங்களது கடன் விபரங்கள், புள்ளிகள் மற்றும் அறிக்கைகளைப் பாதுகாப்பாகவும் உடனுக்குடனும் அணுகக்கூடிய வாய்ப்பை வழங்கும் உலகின் மிகச்சில கடன் தகவல் பணியகங்களில் ஒன்றாக CRIB இணைந்துள்ளது. 1990 ஆம் ஆண்டில் தெற்காசியாவின் முதலாவது கடன் தகவல் பணியகமாக நிறுவப்பட்டதிலிருந்து, பாரம்பரிய அறிக்கை முறைமையிலிருந்து விலகி, நிதி உள்ளடங்கலை ஊக்குவிக்கும் ஒரு முழுமையான கடன் சார் அறிவு இயங்குதளமாக நாம் பரிணமித்துள்ளோம். எமது தேசிய கடன் தரவு கட்டமைப்பை வளப்படுத்துவது, கடன் வழங்குநர்களையும் நுகர்வோரையும் நம்பகமான தரவு சார்ந்த அறிவைக் கொண்டு வலுப்படுத்துவதுடன், இலங்கை முழுவதிலும் தீர்மானங்களை எடுக்கும் திறனையும் மேம்படுத்துகிறது” எனத் தெரிவித்தார்.
டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய தனது சிறப்புரையில் வலியுறுத்துகையில்: “CRIB செய்துள்ள காரியமானது ‘அபாயம்’ என்ற சொல்லை ‘நம்பிக்கை’ என்பதாக மாற்றியமைத்திருப்பதே ஆகும். ஒன்றிணைந்து தொழிற்படக்கூடிய டிஜிட்டல் உட்கட்டமைப்பிற்குள் குடிமக்களின் அனுபவத்தைப் புகுத்துவதன் மூலம், பிணை சார்ந்த பாரம்பரிய கடன் வழங்கும் முறையிலிருந்து விடுபட்டு, தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த நம்பிக்கை மதிப்பீட்டை நோக்கி நாம் நகர்கின்றோம். இது நுண் மற்றும் சிறு, நடுத்தர நிறுவனங்களும் (Micro-SMEs) சாதாரண குடிமக்களும் தடையின்றி இணையவும், பொருளாதார பிரமிட்டின் உச்சத்திலுள்ள தரப்பினருடன் சமமாகப் பரிவர்த்தனைகளில் ஈடுபடவும், இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் உண்மையான இயக்கத்திற்கு வித்திடவும் வழிவகுக்கிறது” எனக் குறிப்பிட்டார்.
தரவு ஆளுகை, தரவுத் துல்லியம் மற்றும் தரவுத் தரம் ஆகியவற்றில் நிறுவனங்களின் சிறப்பம்சங்களை அங்கீகரிக்கும் வகையில், சிறந்த இணக்கப்பாடு, முன்மாதிரியான தரவு ஆளுகை நடைமுறைகள் மற்றும் கடன் தரவு முகாமைத்துவத்தில் சிறந்து விளங்கும் நிறுவனங்களைக் கெளரவிப்பதற்காக CRIB அமைப்பானது நிறுவன தரப்படுத்தல் விருதுகளை ஏற்பாடு செய்கிறது.
இம்முன்னெடுப்பானது, நிதித்துறை முழுவதிலும் தரவுத் தரம், ஆளுகை மற்றும் ஒழுங்குமுறை இணக்கப்பாடுகளின் உயர் தரநிலைகளைப் பின்பற்றுவதற்கு நிறுவனங்களை ஊக்குவிப்பதன் மூலம் தரவுச் சிறப்புமிக்க கலாசாரத்தை வளர்க்கிறது. துல்லியமான கடன் சார் அறிவை உருவாக்கவும், சரியான கடன் தீர்மானங்களை எடுக்கவும், பயனுள்ள அபாய முகாமைத்துவத்திற்கும் மற்றும் பாரிய நிதி ஸ்திரத்தன்மைக்கும் உயர்தரமான மற்றும் நம்பகமான தரவுகளே அடிப்படை அடித்தளமாக அமைகின்றன.
