இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு, துறையில் 25 ஆண்டுகால ஒழுங்குமுறைப்படுத்தல் சிறப்புடன் புரட்சிகரமான மாற்றத்தின் வெள்ளி விழாவைக் கொண்டாடுகிறது

இலங்கையின் காப்புறுதித் துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தி, கடந்த 25 ஆண்டுகளாக இத்துறையின் ஒழுங்குமுறைப்படுத்தல், மேற்பார்வை மற்றும் மேம்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு (IRCSL), தனது 25வது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடுகிறது.

ircsl 25 years event

2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க காப்புறுதித் தொழில் ஒழுங்குமுறைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட (முன்னர் இலங்கை காப்புறுதிச் சபை) இவ்வாணைக்குழு, கடந்த 25 ஆண்டுகளில் சட்டங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு மேற்பார்வை முறையை அமைப்பிலிருந்து, தரவுகளை அடிப்படையாகக் கொண்ட நவீன ஒழுங்குமுறை நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இது பொதுமக்களிடையே நம்பிக்கையை வளர்த்து, நிதி அறிவை மேம்படுத்துவதுடன், நாட்டு மக்கள் மற்றும் வியாபாரங்களின் இடர் மேலாண்மைப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளது.

தனது 25 ஆண்டுகால சிறப்பான பயணத்தைக் கொண்டாடும் வகையில், இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதன்போது கருத்துத் தெரிவித்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் திருமதி தமயந்தி பெர்னாண்டோ அவர்கள்:கடந்த காலங்களில் இடர் மேலாண்மைக்கு முன்னுரிமை அளிக்கும் வலுவான மேற்பார்வை முறைகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் காப்புறுதியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதேவேளை, இத்துறையின் வளர்ச்சியையும் சமநிலையில் பேணுவதற்கு IRCSL இனால் முடிந்தது. இதன் மூலம் காப்புறுதித் துறையானது நாட்டின் பொருளாதாரத்தின் மிகவும் பலமான மற்றும் நிலையான அடிப்படையாகும் என்பதை நாம் நிரூபித்துள்ளோம்.”

இச்சந்திப்பில் கருத்துத் தெரிவித்த இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி அஜித் ரவீந்திர டி மெல் அவர்கள்:நாங்கள் இந்த ஆண்டு விழாவைக் கொண்டாடும் வேளையில், தொழில்முறைப் பயிற்சி மற்றும் புதிய திட்டங்கள் மூலம் எமது நிறுவன வலிமையை அதிகரிப்பது மிகவும் முக்கியமானது. அப்போதே மிக உயர்ந்த தரத்தைப் பேணுவதன் மூலம், ஏற்படக்கூடிய சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள இத்துறையைத் தயார்படுத்த எம்மால் முடியும்.”

2025 ஆம் ஆண்டில் IRCSL அடைந்த குறிப்பிடத்தக்க சாதனைகள் இங்கு விசேடமாக மதிப்பீடு செய்யப்பட்டன. காப்புறுதி சந்தை இடைத்தரகர் உரிமம் மற்றும் மேற்பார்வைப் பிரிவுபுதிதாக நிறுவப்பட்டமை, நாடு தழுவிய பிரச்சாரத் திட்டங்களை முன்னெடுத்தமை மற்றும் முதன்முறையாக பல்கலைக்கழகங்களுக்கிடையிலான காப்புறுதி அறிவுப் போட்டியினை ‘InsureChamp 2025’ வெற்றிகரமாக நடத்தியமை ஆகியவை கடந்த ஆண்டின் முக்கிய வெற்றிகளாகும். அத்துடன், நிறுவனத்தின் உள்ளக மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டதுடன், நிர்வாக மற்றும் நிதிப் பிரிவுகளின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தனித்தனியாகச் செயல்படுத்தப்பட்டன. இம்மாற்றங்கள் வெளிப்படைத்தன்மையைப் பேணுவதற்கும் செயல்பாட்டுத் திறனை அதிகரிப்பதற்கும் உதவியுள்ளன.

எதிர்கால இலக்குகளை அடைவதற்காக 2026 ஆம் ஆண்டிற்கான விசேட வேலைத்திட்டத்தையும் IRCSL இதன்போது அறிவித்தது. அதன் கீழ் நாட்டின் முதலாவது டிஜிட்டல் மோட்டார் காப்புறுதி அட்டைஅறிமுகப்படுத்தப்படவுள்ளதுடன், மோட்டார் காப்புறுதித் தரவுகளைச் சேகரிக்கும் மத்திய தரவுத் களஞ்சியம்ஒன்றையும் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், நிலையான இறப்பு விகித அட்டவணை மூலம் ஆயுள் காப்புறுதி இடர்களைத் துல்லியமாக நிர்வகித்தல் மற்றும் சர்வதேச மட்டத்திலான ‘OECD/ADBI காப்புறுதி மற்றும் ஓய்வூதியச் சேமிப்பு தொடர்பான வட்டமேசை கலந்துரையாடலைநடத்தும் பொறுப்பையும் ஆணைக்குழு ஏற்றுள்ளது. 2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் காப்புறுதிப் பரவலை இரட்டிப்பாக்கும் நோக்கில் “காப்புறுதி முன்னோக்கித் திட்டம்” வெளியிடப்படவுள்ளது. அத்துடன், ஜப்பானின் FALIA நிறுவனத்துடன் இணைந்து இளைய தலைமுறையை காப்புறுதித் துறையின் பால் ஈர்ப்பதற்காக தேசிய அளவிலான கட்டுரைப் போட்டியொன்றை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது 29 காப்புறுதி நிறுவனங்கள், 82 காப்புறுதி தரகர் நிறுவனங்கள் மற்றும் 29 இழப்பு மதிப்பீட்டாளர்களைக் கொண்டுள்ள இலங்கையின் காப்புறுதித் துறை, நாட்டின் நிதிப் பாதுகாப்பில் ஒரு தீர்மானமிக்க காரணியாகும். இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு (IRCSL), காப்புறுதித் துறையை மேலும் வலுப்படுத்தி, காப்புறுதியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்து, இத்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை உயர்த்துவதற்குத் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது.