இலங்கையின் கடன் தகவல் செயலகம் (CRIB), இலங்கை மத்திய வங்கியின் (CBSL) வழிகாட்டுதலின் கீழ், டித்வா புயலினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குகள் மற்றும் சுழற்காற்றால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் வர்த்தகங்களுக்கு உதவ சிறப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த முயற்சியானது, பேரழிவால் தற்காலிக நிதி சிரமங்களை எதிர்கொள்ளும் கடன் பெற்றவர்கள், நிவாரண காலத்தில் (அதிகபட்சம் ஆறு மாதங்கள் வரை) அவர்களின் கடன் பதிவுகளில் தேவையற்று பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது.
புதிய நடவடிக்கைகளின் கீழ்:
• பேரழிவினால் தாமதமான கட்டணங்கள் காலம் கடந்ததாக அறிவிக்கப்படமாட்டாது.
• பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட ஆதரவை பிரதிபலிக்கும் வகையில், நிதி நிறுவனங்கள் கடன் பதிவுகளை புதுப்பிக்கும்.
•வர்த்தகங்கள் மீண்டும் செயல்பட உதவுவதற்காக வழங்கப்படும் புதிய கடன்கள், மீட்பு செயல்முறையின் ஒரு பகுதியாக அடையாளப்படுத்தப்படும்.
இது தொடர்பாக CRIB தெரிவிக்கையில், இந்த நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் வர்த்தகங்களின் கடன் நிலையை பாதுகாக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டவை. இதனால், அவர்கள் எதிர்கால நிதி உதவிகளை எளிதாக பெற முடியும்.
தகுதி பெற்ற கடன் பெற்றவர்கள் தொடர்பான அறிக்கைகளை தயாரிப்பது தொடர்பான பணிகள் 2026 மார்ச் 1 முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், நிவாரண செயல்முறையின் கீழ் வகைப்படுத்தப்பட்ட கடன் வசதிகள் தொடர்ந்து செயற்படாத பட்சத்தில் அவை வழக்கமான அறிக்கை முறையின் கீழ் நிதி நிறுவனங்களால் பதிவு செய்யப்படும்.பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், அவர்களுக்கு கிடைக்கக்கூடிய நிவாரண விருப்பங்கள் குறித்து விவரங்களை அறிய, தங்களது சம்பந்தப்பட்ட வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களை தொடர்புகொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
CRIB நிறுவனத்தின் பணிப்பாளர்/பொதுமுகாமையாளர் திரு. புஷ்பிக்க ஜயசுந்தர அவர்கள் இது தொடர்பாக தெரிவிக்கையில்: “இந்த நடவடிக்கைகள், நியாயமான மற்றும் வெளிப்படையான கடன் தகவல் அமைப்பை பேணுவதோடு, நாட்டின் பொருளாதார மீட்சியை ஆதரிக்கும் எமது அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கின்றன. மேலும், பொதுமக்களுக்கு கடன் அணுகலை மேம்படுத்த உதவுகின்றன.”
1990 ஆம் ஆண்டின் இலங்கை கடன் தகவல் செயலகம் சட்டம் (இல. 18) மற்றும் 1995 ஆம் ஆண்டின் (இல. 8) மற்றும் 2008 ஆம் ஆண்டின் (இல. 42) திருத்தச் சட்டங்களின் கீழ் நிறுவப்பட்ட CRIB, ஆனது தெற்காசியப் பகுதியில் அமைக்கப்பட்ட முதலாவது கடன் தகவல் செயலகமாகும்.
இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சின் முன்முயற்சியாக உருவாக்கப்பட்ட இந்த செயலகமானது, அனைத்து கடன் பெற்றவர்களினதும் கடன் தகவல்களின் தேசிய களஞ்சியமாக செயல்படுகிறது. இது, விரைவான மற்றும் குறைந்த செலவில் கடன் அணுகலை எளிதாக்கும் பல பெறுமதியான சேவைகளை வழங்குவதன் மூலம், அனைத்துபொதுமக்களுக்கும் நிதி உட்சேர்க்கையை மேம்படுத்துகிறது.
