சாதனை வளர்ச்சியையும் மூலோபாய மாற்றத்தையும் சுட்டிக்காட்டி இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்தின் (CRIB) 36 ஆவது வருடாந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது

இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்தின் (CRIB) 36 ஆவது வருடாந்தப் பொதுக்கூட்டம் 2026 செப்டம்பர் 9 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது. 2025 டிசம்பர் 31 உடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான செயற்பாடுகள் மற்றும் மூலோபாய வழிகாட்டல்களை மீளாய்வு செய்வதற்காக, கொடுகடன் தகவல் பணியகத்தின் பணிப்பாளர் சபையும் அதன் உறுப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் ஒன்றுகூடினர்.

photo caption 01 2

தொடக்க நிகழ்வுகளைத் தொடர்ந்து, இலங்கையில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் பேரியல் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிலைபேறான பொருளாதார மீட்சியை நோக்கிய மாற்றத்தில், கொடுகடன் தகவல் பணியகம் வகிக்கும் அத்தியாவசிய பங்கு குறித்து சுட்டிக்காட்டப்பட்டது.

பணியகத்தின் விரிவடைந்து வரும் பணிகள் குறித்துக் கருத்துத் தெரிவித்த அதன் தவிசாளர் திரு. K.G.P. சிறிகுமார குறிப்பிடையில்: ” பொருளாதார நெருக்கடி முகாமைத்துவத்திலிருந்து (Crisis Management) வளர்ச்சியை நோக்கி நகரும் இத்தருணத்தில், கடன் அறிவூட்டலானது (Credit Intelligence) பொருளாதார மீட்சியைச் சாத்தியமாக்கும் ஒரு முக்கிய காரணியாகச் செயற்படுகிறது. நெருக்கடிக்குப் பிந்தைய பொருளாதார மீட்சிப் படிகளில், நம்பகத்தன்மையை மீண்டும் கட்டியெழுப்பும் ஒரு முக்கிய கருவியாக கொடுகடன் தகவல் பணியகம் விளங்குகிறது. இது நுண், சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை  (MSMEs) வலுப்படுத்தவும், நிலைபேறான துறைசார் வளர்ச்சியை உறுதிப்படுத்தவும் கூடிய, தரவு அடிப்படையிலான மற்றும் அபாயங்களைக் கணித்து கடன் வழங்கும் கட்டமைப்புகளை நோக்கி நகர்வதற்கு நிதி நிறுவனங்களுக்கு உறுதுணையாக அமைகிறது” எனக் கூறினார்.

அதிகரித்து வரும் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் தரவு சார்ந்த கடன் வழங்கும் முறைகளுக்கான தேவை அதிகரிப்பு என்பன காரணமாக, இலங்கை கொடுகடன் தகவல் பணியகம் (CRIB) 2025 நிதியாண்டில் வலுவான செயற்பாட்டு மற்றும் நிதிசார் முடிவுகளைப் பதிவு செய்துள்ளது. இதன்படி, பணியகத்தால் வழங்கப்பட்ட மொத்த கடன் மற்றும் பகுப்பாய்வு அறிக்கைகளின் எண்ணிக்கை 41% ஆல் அதிகரித்து 13.46 மில்லியனாகப் பதிவாகியுள்ளது. தரப்படுத்தப்பட்ட CRIB Score அறிக்கைகளின் பயன்பாடு 89% ஆல் அதிகரித்து 7.7 மில்லியனை எட்டியுள்ளதுடன், MyReport செயலி ஊடாக பொதுமக்கள் தமக்கான கடன் தகவல்களைத் சுயமாகப் பெற்றுக்கொள்ளும் வீதம் 79% ஆல் அதிகரித்து 77,000 ஆகப் பதிவாகியுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் நிதியறிவு அதிகரித்து வருவதைப் பிரதிபலிக்கிறது. நிதிசார் முடிவுகளிலும் பணியகம் நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. பணியகத்தின் மொத்த வருமானம் 45% ஆல் அதிகரித்து 2.41 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளதுடன், வரிகளுக்குப் பிந்தைய இலாபம் 42% ஆல் அதிகரித்து 1.48 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. மேலும், ஒரு பங்கிற்கான ஈட்டம் 44% ஆல் அதிகரித்து 5,924 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

பணியகத்தின் மூலோபாய மாற்றம் குறித்து கருத்துத் தெரிவித்த அதன் பணிப்பாளரும் பொது முகாமையாளருமான திரு. புஷ்பிக ஜயசுந்தர, “பாரம்பரியக் கொடுகடன் தகவல்களை வழங்கும் நிறுவனத்திலிருந்து, முன்கணிப்புக் கடன் அறிவூட்டல் (Predictive credit intelligence) நிறுவனமாக எமது பணியகம் அடைந்து வரும் மூலோபாய மாற்றத்திற்கு 2025 ஆம் ஆண்டு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. எமது விரிவான தரவு வளங்களை அதிநவீன தரவு மற்றும் நடத்தைமுறைப் பகுப்பாய்வுகளுடன் (Behavioral analytics) ஒன்றிணைப்பதன் மூலம், விஞ்ஞான ரீதியான மற்றும் அபாயங்களை அடிப்படையாகக் கொண்ட தீர்மானங்களை எடுக்கும் நிலைக்கு நிறுவனங்களை வலுப்படுத்துகிறோம். அத்துடன் போதிய கடன் தகவல்கள் இல்லாத தனிநபர்கள் மற்றும் நுண், சிறு, நடுத்தர தொழில்முயற்சிப் (MSME) பிரிவினருக்கான நிதிசார் உள்ளடங்கலையும்  (Financial inclusion) விரிவுபடுத்துகிறோம்” எனக் குறிப்பிட்டார்.

இலங்கையிலுள்ள சுமார் 70 உரிமம் பெற்ற நிதி நிறுவனங்களை ஒன்றிணைக்கும் தனது வலுவான டிஜிட்டல் கட்டமைப்பைச் சுட்டிக்காட்டிய கொடுகடன் தகவல் பணியகம், தரவு சேகரிப்பு, சரிபார்த்தல் மற்றும் பகிர்வு உள்ளிட்ட தனது முக்கிய செயற்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதற்கான முதற்கட்டப் பணிகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது . அத்துடன், தனிநபர் தரவு பாதுகாப்பு கட்டமைப்பை (Personal Data Protection Framework) தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருவதாகவும், இதற்கென பிரத்யேக தரவு பாதுகாப்பு அதிகாரிகளை (Data Protection Officers) நியமித்து, அதிகபட்ச வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான துறைசார் தரவு பயன்பாட்டுக் கோவையை உருவாக்கி வருவதாகவும் பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.

நிகழ்ச்சிநிரலுக்கு அமைய, 2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கை மற்றும் கணக்கு அறிக்கைக்குப் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்து அங்கீகாரம் வழங்கினர்.

நம்பகத்தன்மை, தரவுத் தூய்மை, கடன் அறிவூட்டல் (Credit Intelligence) மற்றும் தேசியப் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றின் மீது கட்டியெழுப்பப்பட்ட நவீன, தொழில்நுட்ப வசதிகளுடன்கூடிய கடன் முறைமையை மேம்படுத்துவதில் கொடுகடன் தகவல் பணியகம் (CRIB) தொடர்ந்து உறுதியுடன் செயற்பட்டு வருகிறது.

1990 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க இலங்கை கொடுகடன் தகவல் பணியகச் சட்டம் (1995 ஆம் ஆண்டின் 08 ஆம் இலக்க மற்றும் 2008 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்கச் சட்டங்கள் மூலம் திருத்தப்பட்டவாறு) மூலம் நிறுவப்பட்ட CRIB, தெற்காசிய பிராந்தியத்தின் முதலாவது கொடுகடன் தகவல் பணியகமாகும். இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதியமைச்சின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட இப்பணியகம், நாட்டின் அனைத்துக் கடன் பெறுநர்களினதும் கடன் தகவல்களைப் பேணும் தேசிய களஞ்சியமாகச் (National repository) செயற்பட்டு வருகிறது. அத்துடன், பொதுமக்கள் விரைவாகவும் குறைந்த செலவிலும் கடன்களைப் பெற்றுக்கொள்வதை இலகுபடுத்தும் பல பெறுமதிசேர் சேவைகளை வழங்கி, அனைத்துக் குடிமக்களுக்குமான நிதிசார் உள்ளடங்கலை (Financial inclusion) மேம்படுத்தி வருகின்றது.